தொடர்-8 : ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்

ஜம்ராத்தில் கல் எறிவதில் ஏற்படும் தவறுகள்

பெருநாள் தினத்தன்று (துல்ஹஜ் 10) சூரிய உதயத்திற்குப் பின், ஹாஜிகள் கற்களை எறியும் முதல் ஜம்ராவே ஜம்ரத்துல் அகபாவாகும்.

பலஹீனமானவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியவர்கள் பெருநாள் தின இரவின் கடைசி நேரத்தில் ஜம்ராத்தில் கற்களை எறிய அனுமதியுண்டு.

1. துல்ஹஜ் பத்தாவது நாள் எறியும் கற்களை, காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்திற்குள் எறிய வேண்டும் என்று கருதுவது.இது தவறாகும். இதனால் ஜம்ராத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகப்பெரும் களைப்பிற்கும் சிரமத்திற்கும் உள்ளாகின்றனர். சில நேரங்களில் உயிர் பலிகள் கூட ஏற்பட்டு விடுகின்றது. எனவே பின்னேரத்திலும் கற்களை எறிய அனுமதி உள்ளது.

இது குறித்து உலமாக்களின் வழிகாட்டுதலோடு ஹாஜிகளை வழிநடத்துபவர்கள் செயல்படவேண்டும்.

அஸ்மா(ரலி) அவர்களின் ஊழியர் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்.அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா? எனக் கேட்டார்கள். நான் “இல்லை!” என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு “சந்திரன் மறைந்துவிட்டதா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்!” என்றதும் “புறப்படுங்கள்!” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல் எறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், “அம்மா! நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!” என்றேன். அதற்கவர்கள்,” மகனே! நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்” என்றார்கள்.

📚{நூல்- புகாரி:1679}

பெருநாள் தினத்தில், சூரியன் மறையும் வரை, ஜம்ரத்துல் அகபாவில் கற்களை எறிவதற்கான இறுதி நேரமாகும்.கூட்ட நெரிசலாகவோ, தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஜம்ராத் வெகு தூரமாக இருந்தாலோ, இரவின் கடைசி நேரம் வரை கற்களை எறிவதை பிற்படுத்துவது குற்றமாகாது.எனினும் 11வது நாள் ஃபஜ்ரு உதயமாகும் வரை பிற்படுத்தக் கூடாது.

🔸 கற்களை எறியும் நேரம்

வபரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.”நான் எப்போது கல்லெறிவது?” என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!” என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, “நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்எறிவோம்!” எனக் கூறினார்கள்.

📚{புகாரி : 1746}

துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக் தினங்களில் ளுஹர் நேரத்தில் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து இரவின் கடைசி நேரம் வரை கற்களை எறியலாம். கூட்ட நெரிசலாகவோ சிரமமாகவோ இருக்கும் பட்சத்தில் ஃபஜ்ரு உதயமாகுவதற்கு முன்பு வரை கற்களை எறியலாம். ஃபஜ்ருக்கு பின்னரும் பிற்படுத்தக் கூடாது.

துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக் தினங்களில், ளுஹர் நேரத்தில் சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பாக கற்களை எறியக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ளுஹர் நேரத்தில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகுதான் கற்களை எறிந்துள்ளார்கள்.

“என்னிடமிருந்து ஹஜ்ஜின் கிரிகைகளை கற்றுக்கொள்ளுங்கள்” என்ற நபியவர்களின் கூற்றிற்கேற்ப செயலும் அமைந்திருந்தது.

பகலின் முற்பகுதியில் குளிர்ச்சியாகவும் இலகுவான சூழல் இருந்த நிலையிலும் கடுமையான வெப்பத்துடன் கற்களை எறிவதை பிற்படுத்தினார்கள். எனவே இந்த நேரத்திற்கு முன்பாக கற்களை எறியக்கூடாது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகைக்கு முன்பாக சூரியன் உச்சி சாய்ந்த நேரத்தில் கற்களை எறிந்துள்ளார்கள் என்பதும் இதிலிருந்து அறிய முடிகிறது.

2. சிலர் ஜம்ராத்களில் ஷைத்தான்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஷைத்தான்களுக்கு கல்லடிப்பதாக கருதுகின்றனர். இதுவும் பொதுவாக நிகழும் தவறாகும். ஜம்ராத்க்களில் எந்த ஒரு ஜம்ராத்திலும் ஷைத்தான்கள் இல்லை.

இந்த மூன்று ஜம்ராத்களிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஷைத்தான் எடுத்துக் காட்டப்பட்டான். எனவே அவர்கள் ஒவ்வொரு ஜம்ராத்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தக்பீர் கூறி எழு கற்களை எறிந்தார்கள்.

3. சிலர் கற்களை எறிவதில் கடுமையாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்கின்றனர். திட்டுவது, சபிப்பது, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒரு முஸ்லிமிற்கு அழகல்ல.

மேலும் சிலர் பெரிய கற்கள், செருப்பு, கண்ணாடி பாட்டில்கள், மரக்கட்டைகளை எறிகின்றனர். இது நபிவழிக்கு மாற்றமான செயல்.

நபி (ஸல்) அவர்கள் கடலை போன்று சிறு கற்களை எறிந்துள்ளார்கள். இவ்வாறு எறிவதற்கே முஸ்லிம் சமூகத்திற்கும் கட்டளையிட்டுள்ளார்கள்.

4. அதிகமான மக்கள் ஜம்ராத்களில் ஒவ்வொரு கல்லையும் எறியும் போது “பிஸ்மில்லாஹ்” என்று கூறுகின்றனர்.இதுவும் அதிகமான மக்களிடம் ஏற்படும் தவறாகும். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறியே கற்களை எறிந்துள்ளார்கள். கூடுதலாக வேறு எந்த வார்த்தையையும் கூறியதில்லை.

5. ஏழு கற்களையும் சேர்த்து எறிவது இதுவும் சுன்னாவிற்கு மாற்றமாகும். தக்பீர் கூறி ஒவ்வொரு கற்களாக எறிய வேண்டும். இதுவே சரியான வழிமுறையாகும்.

6. சிறிய ஜம்ராத் மற்றும் நடு ஜம்ராத்தில் கற்களை எறிந்துவிட்டு நீண்ட நேரம் நின்று துஆ செய்வதில் அலட்சியமாக இருப்பது இதுவும் தவறாகும்.

இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய் கிப்லாவை முன்னோக்கி மிக நீண்ட நேரம் நின்று கொண்டு, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள்.

பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, “இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!” எனக் கூறுவார்கள்.

{அறிவிப்பாளர் : ஸாலிம்(ரஹ்)}

📚{நூல் : புகாரி 1752}.

7. ஜம்ராக்களில் எறிவதற்காக கற்களை கழுவுவது இதுவும் சுன்னாவிற்கு மாற்றமான செயல். கற்கள் அசுத்தமில்லை. சுத்தம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுமில்லை.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ எறியும் கற்களை சுத்தம் செய்ததாக ஆதாரப்பூர்வமான எந்த செய்திகளும் இல்லை. இவ்வாறு செய்வது மார்கத்தில் வரம்பு மீறுவதாகும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..

8. ஹாஜிகளில் சிலர் ஜம்ராக்களில் கற்களை எறியாமல் அலட்சியமாக இருப்பது.

கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் கற்களை எறிவதற்கு ஆற்றல் பெற்றிருந்தும் பிறரிடம் பொறுப்பு சாட்டுவது ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக நிறைவேற்றுங்கள் {2:196} என்ற அல்லாஹ்வின் வார்த்தைக்கு மாற்றமான செயலாகும். மேலும் கல்லெறிதல் என்ற கடமையை விட்ட குற்றத்திற்கு ஆளாகுவார்.

இயலாதவர்கள், பலஹீனமானவர்கள் கற்களை எறிவதற்கு பிறரிடம் பொறுப்பு சாட்டுவது குற்றமாகாது..

தொகுப்பு : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *